ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கைது

புதுடில்லி : மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருந்த நிலையில், பணம் பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியதாக ஒடிசா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குத்துசியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 


சுப்ரீம் கோர்ட் தடை மீறி தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியது மட்டுமின்றி, தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கில் சாதகமான முடிவை பெற்று தருவதாகவும் குத்துசியை வாக்குறுதி அளித்துள்ளார் . இதற்காக பெரிய அளவிலான தொகையை குத்துசி லஞ்சமாக பெற்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து, சோதனை மேற்கொண்டது.


டில்லி, லக்னோ, புவனேஸ்வர் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. டில்லியில் உள்ள குத்துசியின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.91 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. இந்த லஞ்ச விவகார வழக்கில் குத்துசி உள்ளிட்ட 5 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதே வழக்கில் புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


லஞ்சம் கொடுத்து, மாணவர் சேர்க்கை நடைபெற்ற விவகாரம் வெளியானதும் 46 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அடுத்து 2 ஆண்டுகளுக்கு ஒடிசா அரசு தடை விதித்துள்ளது. இந்த கல்லூரிகள், போதிய உள்கட்டமைப்புக்கள் இல்லாமலும், முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
 
Top