முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு ஓர் இணையதளம்
வாழ்வில், பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை என்று கூறலாம். ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கோ, வாழ்க்கையே பிரச்னை தான்.
இதில், மணவாழ்வுக்கான தேடலோ, இவர்களுக்கு போர்க்களம் தான். அதனாலேயே பலருக்கு திருமணம் என்பது கனவாகவே முடிந்து விடுகிறது. ஆனால், மற்றவர்களை விட, மாற்றுத்திறனாளிகளுக்கு தான், மணவாழ்க்கை முக்கியம்; காரணம், துணையும், அன்பும், ஆறுதலும் இவர்களுக்கு தான் அதிகம் தேவை.
இதை, எத்தனை பேர் உணர்ந்தனரோ தெரியாது... ஆனால், சென்னை சாயி சங்கரா மேட்ரி மோனியல்ஸ் நிறுவனர், நா.பஞ்சாபகேசன் நன்கு உணர்ந்தார். காரணம், இவரும் ஒரு மாற்றுத்திறனாளி!
கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக, தாம் நடத்தி வரும் மேட்ரிமோனியல் மூலமாக, பல ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்தி வைத்ததுடன், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான இணையை தேர்ந்தெடுக்க, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
ஜாதி, மத வேறுபாடின்றி, முற்றிலும், இலவச சேவையாக நடத்தப்படும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி, தங்களுக்கு பொருத்தமான துணையை மாற்றுத் திறனாளிகள் தேடிக் கொள்ளலாம்; மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்ய விரும்புவோரும் இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம். இது, மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், யாரும் இந்த தளத்தை தவறாக பயன்படுத்தி விடக் கூடாது என்பதற்காக, பதிவதற்கு சில வரைமுறைகள் உள்ளன. இணையதளம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள், நேரில் வந்தும் பதிவு செய்யலாம். இது பற்றிய முழு விவரம் மற்றும் தொலைபேசி எண்கள் பெற கிளிக் செய்யவும்.
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குள் திருமணம் செய்வதால், தங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்குமோ என்ற பயமோ, சந்தேகமோ வேண்டாம்; நார்மலான குழந்தைகள் பிறக்கும். இதை மெய்ப்பிக்கும் வகையில், திருமணம் செய்து, நார்மலான குழந்தைகளை பெற்று, சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும், மாற்றுத்திறனாளி தம்பதிகளை மேடையேற்றி, பார்வையாளர்களுக்கு நம்பிக்கையை விதைத்து வருகிறார், பஞ்சாபகேசன்.
பார்ப்பதில், கேட்பதில், பேசுவதில், நடப்பதில், புரிந்து கொள்வதில் என்று, நாட்டில், 5 சதவீத மக்கள், ஊனமுற்றவர்கள் என்ற அடையாளத்தோடு இருக்கின்றனர். இவர்களுக்கு, உடலில் தான் ஊனமே தவிர, மனதில் எவ்வித ஊனமில்லை. இவர்கள், தகுந்த துணையோடு, மன மகிழ்ச்சியுடன், ஆனந்தத்துடன் வாழ, இந்த இணையதளம் உதவுகிறது.
'நாம் தான் மாற்றுத்திறனாளி இல்லையே... நமக்கு எதற்கு இந்த கட்டுரை...' என்று, இதைப் படிப்போர் நினைக்க வேண்டாம்; உங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு இவ்விஷயத்தை கொண்டு செல்லுங்கள். அது, அவர்களுக்கு செய்யும் உதவி மட்டுமல்ல; உங்களுக்கு நீங்களே தேடிக் கொள்ளும் புண்ணியமும் கூட!
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!