முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பெண்ணின் சுயசம்பாத்திய சொத்துக்கள் 

ஒரு பெண்ணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில்  அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்டப்படி  யாருக்குப் போய்ச் சேரும்?

கோமதி என்பவர் திடீரென்று இறந்துவிடுகிறார்! என்று வைத்துக் கொள்வோம். அவரது சுயசம்பாத்தியமாக அவரது வங்கிக் கணக்கில் 12 லட்ச ரூபாய் இருக்கிறது.  இந்த பணத்திற்கு கோமதியின் கணவன் , மகன், மகள் ஆகியோர்கள் முதல் நிலை வாரிசுதாரர்கள் ஆவார்கள். வங்கியில் உள்ள 12 லட்ச ரூபாயை மூன்று சமபங்காக பிரித்து ஒவ்வொருவருக்கும் 4 லட்ச ரூபாய் வீதம் கொடுக்க வேண்டும். 

கோமதியின்  மகன்  இறந்து போயிருந்தால்?
கோமதியின் மகன் கோமதி  இறப்பதற்கு முன்னாலேயே இறந்து விட்டால், அந்த மகனின் பிள்ளைகளுக்கு ரூபாய் 4 லட்சம் சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்படும். 

கோமதியின் மகள்  இறந்து போயிருந்தால்?
கோமதியின் மகள் கோமதி இறப்பதற்கு முன்னாலேயே இறந்துவிட்டால், அந்த மகளின் பிள்ளைகளுக்கு ரூபாய் 4 லட்சம் சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்படும். 

கோமதியின் கணவன் இறந்து போயிருந்து, குழந்தைகளும் இல்லாமல் இருந்தால்?
கோமதி இறப்பதற்கு முன்னாலேயே கோமதியின் கணவனும் இறந்து போயிருந்து, குழந்தைகளும் இல்லை என்றால், (இரண்டாம் நிலை வாரிசுதாரர்களான) கோமதியின் கணவனது வாரிசுதாரர்களுக்கு ரூ.12 லட்ச ரூபாய் சரிசமமாக பங்கிட்டு கொடுக்கப்படும்.

கணவனது வாரிசுதாரர்களும் இல்லையென்றால்?
கோமதியின் கணவனது வாரிசுதாரர்களும் இல்லையென்றால், (மூன்றாம் நிலை வாரிசுதாரர்களான)  கோமதியின் பெற்றோர்களுக்கு ரூ.12 லட்சம் போய்ச் சேரும்.

கோமதியின் பெற்றோர்களும் இல்லை என்றால்?
கோமதியின் பெற்றோர்களும் உயிருடன் இல்லை என்றால், அந்த பெற்றோர்களுடைய வாரிசுகளுக்கு ரூ.12 லட்சம் போய்ச் சேரும்.

கோமதியின் தந்தைக்கு இரண்டு மனைவிகள் என்றால்?
கோமதியின் தந்தைக்கு இரண்டு மணைவிகள் என்றும், கோமதியின் தாயார் , கோமதியின் தந்தைக்கு மூத்த தாரம் என்றும் வைத்துக் கொள்வோம். கோமதியின் சித்தி, கோமதியின் தந்தைக்கு  முறைப்படி மனைவியாக ஆகியிருந்தாலும், கோமதியின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியாது. கோமதியின் தாய் வயிற்றில் பிறந்த சகோதர, சகோதரிகளே  கோமதியின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியும்.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்

ஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில்  அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்டப்படி  யாருக்குப் போய்ச் சேரும்?

கோபால் என்பவர் திடீரென்று இறந்துவிடுகிறார்! என்று வைத்துக் கொள்வோம். அவரது சுயசம்பாத்தியமாக அவரது வங்கிக் கணக்கில் 12 லட்ச ரூபாய் இருக்கிறது.  இந்த பணத்திற்கு கோபாலின் மனைவி, மகன், மகள் மற்றும் தாய் ஆகியோர்கள் முதல் நிலை வாரிசுதாரர்கள் ஆவார்கள். வங்கியில் உள்ள 12 லட்ச ரூபாயை நான்கு சமபங்காக பிரித்து ஒவ்வொருவருக்கும் 3 லட்ச ரூபாய் வீதம் கொடுக்க வேண்டும். கோபாலின் தந்தைக்கு பங்கு கிடையாது. அவர் இரண்டாம் நிலை வாரிசுதாரர் ஆவார்.

மகனின் சொத்துக்கள் தந்தைக்கு எப்போது கிடைக்கும்?
கோபாலுக்கு திருமணம் ஆகவில்லை, கோபால் இறப்பதற்கு முன்னாலேயே தாயும் இறந்துபோய்விட்டார் என்றால், அந்த 12 லட்ச ரூபாயும் நேரடியாக கோபாலின்  தந்தைக்கு போய்ச் சேரும்.

கோபாலின் மகன்  இறந்து போயிருந்தால்?
கோபாலின் மகன் கோபால் இறப்பதற்கு முன்னாலேயே இறந்துவிட்டால், அந்த மகனின் பிள்ளைகளுக்கு ரூபாய் 3 லட்சம் சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்படும். 

கோபாலின் மகள்  இறந்து போயிருந்தால்?
கோபாலின் மகன் கோபால் இறப்பதற்கு முன்னாலேயே இறந்துவிட்டால், அந்த மகளின் பிள்ளைகளுக்கு ரூபாய் 3 லட்சம் சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்படும். 

கோபாலின் தந்தையும் இறந்து போயிருந்தால்?
கோபால் இறப்பதற்கு முன்னாலேயே தந்தையும்  இறந்துபோய்விட்டார் என்றால், கோபால் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு ரூ.12 லட்ச ரூபாய் சரிசமமாக பங்கிட்டு கொடுக்கப்படும்.
 
Top