வீட்டுவேலை செய்யும் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.. 

மனைவிக்கு அதிரடி உத்தரவிட்ட மகாராஷ்டிரா கோர்ட்

சோலாப்பூர்: மகாராஷ்டிராவில் வீட்டு வேலை செய்யும் கணவருக்கு, வேலைக்கு சென்று சம்பாதிக்கும் மனைவி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என விவாகரத்து வழக்கு ஒன்றில் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகே உள்ள சதாரா என்ற இடத்தை சேர்ந்தவர் அனில் (38). இவரது மனைவி சரிதா (47). கடந்த 2004ம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. 

சரிதா நன்கு படித்தவர், ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். ஆனால் அனில் அவ்வளவாக படிக்கவில்லை. இதனால் சரிதா வேலைக்கு செல்ல, வீட்டு வேலைகளை அனில் கவனித்து வந்தார். 

இந்நிலையில் சமீபகாலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மோதலின் உச்சமாக அனிலை வீட்டை விட்டு வெளியே விரட்டினார் சரிதா. 

இதனால் சோலாப்பூர் நீதிமன்றத்தில் சரிதா மீது வழக்குத் தொடுத்தார் அனில். 
வழக்கு விசாரணையின் போது, "எனக்கு திருமணமானதிலிருந்து என்னை சரிதா அனைத்து வீட்டு வேலைகள் செய்ய வைத்தார். அதோடு பலமுறை அடித்தும் கொடுமைகள் செய்தார். 

ஒரு கட்டத்தில் என்னை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டார். இதனால் எனக்கு உதவித்தொகை வழங்கிட உத்தரவிட வேண்டும்" என அனில் கோரிக்கை விடுத்தார். 

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை சரிதா மறுத்தார். விசாரணையின் இறுதியில் அனில் பக்கம் நியாயம் இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து மாதாமாதம் சரிதா, அனிலுக்கு ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஒன்இந்தியா
 
Top