தவறுதலாக வழக்குகள் பதிவு, போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை:'அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடும் என கருதி, ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது' என, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, போலீஸ் நிலையங்களுக்கு,டி.ஜி.பி., அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பொது அமைதிக்கு ஒருவர் பங்கம் விளைவிக்க கூடும் என கருதினால், அவ்வாறு செய்யாமல் இருக்க, உரிய உத்தரவாதம் அல்லது ஜாமின் கோர, தாசில்தாருக்கு அதிகாரம் உள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு, 107 இதற்கு வகை செய்கிறது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, வடக்கு பாளையத்தை சேர்ந்தவர், ராஜ்குமார். இவர் உள்ளிட்ட மூவர் மீது, தாராபுரம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜ்குமார் தாக்கல் செய்த மனு:
குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு, 107 ன்கீழ் குற்றம் புரிந்ததாக, எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்ய முடியாது. இந்த பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு அதிகாரம் இல்லை.எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், ஜி.கார்த்திகேயன், ''அமைதிக்கு இடையூறு ஏற்படுத்த கூடும் என தகவல் வந்ததாக கூறி, குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, வழக்கு பதிவு செய்ய முடியாது. பல போலீஸ் நிலையங்களில், இவ்வாறு தவறுதலாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது,'' என்றார்.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மனுவை விசாரித்த, நீதிபதி சி.டி.செல்வம் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் வழக்கறிஞர், கார்த்திகேயன் வாதம், சரியாக உள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவேட்டில், குற்றம் புரியக்கூடும் என, குறிப்பிடக்கூடாது. தாசில்தார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கான தகவலை, போலீசார் பெற்றால், அதை, தனியாக ஒரு பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். பின், தாசில்தாரின் நடவடிக்கைக்காக, அனுப்ப வேண்டும்.
போலீசாருக்கு தகுந்த உத்தரவுகளை பிறப் பிக்க ஏதுவாக, இந்த உத்தரவின் நகலை, டி.ஜி.பி.,க்கு அனுப்பலாம். இந்த வழக்கை பொறுத்த வரை, தாராபுரம் போலீஸ் பதிவு செய்த வழக்கு, ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர்